புதன், 24 ஜூன், 2009

வருது புதியசட்டம்- செயல்படுமா..?

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் இந்த சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் மீது அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர், காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் ஆகியோர் பேசினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தவுடனேயே அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், இலவச சீருடை போன்றவற்றை வழங்கி இந்த அரசு கல்வியின் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறது.

இந் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வருவது கவலை அளிப்பதாக தெரிவித்த முதல்வர் கருணாநிதி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

கல்விக் கட்டணங்களில் எல்லா மாநிலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது ஒரு மோகமாக உருவாகிவிட்டது.

அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றதை குறிப்பிடலாம்.

சுய நிதி கல்வி நிறுவனங்கள் அவர்களே தங்கள் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால் இந்த விஷயத்தில் மாநில அரசு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

இப்போதும் கூட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

116 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். நிச்சயமாக பள்ளியின் அங்கீகாரம் ரத்து என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்தை இந்தக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழு அமைப்பது, மீறினால் நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட ஷரத்துக்கள் இந்த சட்ட மசோதாவில் சேர்க்கப்படும்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றார் தென்னரசு.

இது தட்ஸ்தமிழ் செய்தி


மக்கள் கருத்து:

ராமசாமி: அட போங்கய்யா..! நீங்கவேற சட்டம் போடுராகலாமுல சட்டம். தனியார் பள்ளிகளை நடத்துவதே அரசியல்வாதிகள்தானப்பா.... அவுகளுக்கு சட்டம் எல்லாம் சக்கரைபொங்கல் மாதிரி இது ஏட்டளவில்தான் இருக்கும்.

அன்வர் : அய்யா.. இலவச பஸ் பாஸ் கொடுக்குறதுனாலய்யோ இலவச சைக்கிள் கொடுக்குறதுனாலயோ கல்வித்தரம் உயர்திராது நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆங்கிலப் பள்ளிகளுக்கு நிகறான தரமான கல்விமுறை
20 மானவர்களுக்கு ஒரு ஆசிரியர் தரமான கட்டட வசதி பள்ளிக்கூட நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் சக ஆசிரியர்களுடன் அரட்டை அடித்துவிட்டு மாலையில் டியூசன் என்ற பெயரால் காசை பிடுங்கும் ஆசிரியர்களை நீக்கிவிட்டு வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால் கல்வித்தரம் உயரும் தானாகவே பெற்றோர்களுக்கு ஆங்கிலப்பள்ளி மோகம் நீங்கி தமிழ் பள்ளிகள் பக்கம் திரும்பும். அப்போது நீங்கள் சட்டம் எல்லாம் போடவேண்டாம் தனியார்ப் பள்ளிகள் அவர்களாகவே முன்வந்து கட்டணக்குறைப்பு செய்வார்கள் அல்லது மூடிவிட்டு ஓடிவிடுவார்கள்

டேவிட்: மொதல்ல கல்லூரிகள் வைத்திருப்பவர்கள் அமைச்சராக முடியாதுன்னு சட்டம் போடுங்க. அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு அந்தக்காலத்திலெல்லாம் கல்விச்சாலைகள் திறந்தவர்கள் சேவை மனப்பான்மையோடு திறந்தனர் இப்பொழுது தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த வியாபாரம் கல்விதான்... காலம் கெட்டுக்கெடக்கு சாமி.. அய்யா எங்களுக்கு டிவி வேணாம், கேஸ் அடுப்பு வேணாம், தரமான கல்வி முதல்வகுப்பு தொடங்கி கல்லூரிப்படிப்பு வரை இலவசமாக ஆக்குங்கள் காலம் உங்களை வாழ்த்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக