புதன், 24 ஜூன், 2009

வருது புதியசட்டம்- செயல்படுமா..?

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் இந்த சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் மீது அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர், காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் ஆகியோர் பேசினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தவுடனேயே அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், இலவச சீருடை போன்றவற்றை வழங்கி இந்த அரசு கல்வியின் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறது.

இந் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வருவது கவலை அளிப்பதாக தெரிவித்த முதல்வர் கருணாநிதி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

கல்விக் கட்டணங்களில் எல்லா மாநிலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது ஒரு மோகமாக உருவாகிவிட்டது.

அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றதை குறிப்பிடலாம்.

சுய நிதி கல்வி நிறுவனங்கள் அவர்களே தங்கள் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால் இந்த விஷயத்தில் மாநில அரசு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

இப்போதும் கூட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

116 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். நிச்சயமாக பள்ளியின் அங்கீகாரம் ரத்து என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்தை இந்தக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழு அமைப்பது, மீறினால் நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட ஷரத்துக்கள் இந்த சட்ட மசோதாவில் சேர்க்கப்படும்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றார் தென்னரசு.

இது தட்ஸ்தமிழ் செய்தி


மக்கள் கருத்து:

ராமசாமி: அட போங்கய்யா..! நீங்கவேற சட்டம் போடுராகலாமுல சட்டம். தனியார் பள்ளிகளை நடத்துவதே அரசியல்வாதிகள்தானப்பா.... அவுகளுக்கு சட்டம் எல்லாம் சக்கரைபொங்கல் மாதிரி இது ஏட்டளவில்தான் இருக்கும்.

அன்வர் : அய்யா.. இலவச பஸ் பாஸ் கொடுக்குறதுனாலய்யோ இலவச சைக்கிள் கொடுக்குறதுனாலயோ கல்வித்தரம் உயர்திராது நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆங்கிலப் பள்ளிகளுக்கு நிகறான தரமான கல்விமுறை
20 மானவர்களுக்கு ஒரு ஆசிரியர் தரமான கட்டட வசதி பள்ளிக்கூட நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் சக ஆசிரியர்களுடன் அரட்டை அடித்துவிட்டு மாலையில் டியூசன் என்ற பெயரால் காசை பிடுங்கும் ஆசிரியர்களை நீக்கிவிட்டு வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால் கல்வித்தரம் உயரும் தானாகவே பெற்றோர்களுக்கு ஆங்கிலப்பள்ளி மோகம் நீங்கி தமிழ் பள்ளிகள் பக்கம் திரும்பும். அப்போது நீங்கள் சட்டம் எல்லாம் போடவேண்டாம் தனியார்ப் பள்ளிகள் அவர்களாகவே முன்வந்து கட்டணக்குறைப்பு செய்வார்கள் அல்லது மூடிவிட்டு ஓடிவிடுவார்கள்

டேவிட்: மொதல்ல கல்லூரிகள் வைத்திருப்பவர்கள் அமைச்சராக முடியாதுன்னு சட்டம் போடுங்க. அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு அந்தக்காலத்திலெல்லாம் கல்விச்சாலைகள் திறந்தவர்கள் சேவை மனப்பான்மையோடு திறந்தனர் இப்பொழுது தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த வியாபாரம் கல்விதான்... காலம் கெட்டுக்கெடக்கு சாமி.. அய்யா எங்களுக்கு டிவி வேணாம், கேஸ் அடுப்பு வேணாம், தரமான கல்வி முதல்வகுப்பு தொடங்கி கல்லூரிப்படிப்பு வரை இலவசமாக ஆக்குங்கள் காலம் உங்களை வாழ்த்தும்.

அமெரிக்காவில் ஆவி பிடிக்கத் தடை...?

இளைஞர்களிடையே நிலவும் புகை பிடிக்கும் பழக்கத்திற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டம் அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளது.

குடும்ப புகை பிடித்தல் தடை மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற பெயர் கொண்ட இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை அந்நாட்டு உணவு மற்றும் மருந்துத்துறை மேற்கொள்ளும்.

இந்த சட்டத்தின் மூலம் இளைஞர்களை அதிகம் கவரும் வாசனையான சிகரெட் மற்றும் சிறிய வகை சிகரெட்கள் தடை செய்யப்படும்.

மேலும், லைட்ஸ், மைல்ட் என்ற பெயரில் வெளி வரும் சிகரெட்களுக்கும் தடை விதிக்கப்படும். இதுதவிர புகையிலைப் பொருட்கள் மீது கண்டிப்பாக இனி எச்சரிக்கை வாசகங்களையும் பொறிக்க வேண்டும்.

அதேபோல இனிமேல் தயாரிக்கப்படும் சிகரெட்களில் நிக்கோடின் அளவையும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் குறைக்க வேண்டும்.

இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் நடந்தது.

அப்போது ஒபாமா பேசுகையில் பல காலமாகவே நாம் எதிர்பார்த்து வந்த மாற்றத்தை இந்த சட்டம் தரும். நமது குழந்தைகளை அபாயத்திலிருந்து காக்க இந்த மாற்றம் வந்துள்ளது என்றார்.

அமெரிக்காவில் புகை பிடிக்கும் பழக்கத்தால் பலர் இறக்கிறார்கள். இறப்பு அளவு குறைந்த போதிலும் கூட ஆண்டுக்கு 4 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆண்டுதோறும் செலவழிக்கும் தொகை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அரசின் இந்த சட்டத்தை பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஆல்ட்ரியா குரூப் வரவேற்றுள்ளது. இருப்பினும் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீய அம்சங்கள் குறித்து இளைஞர்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என இது கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் மால்போரோ, விர்ஜீனியா ஸ்லிம்ஸ், பேசிக், செஸ்டர்பீல்ட் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்க இளைஞர்களிடையே கணிசமான அளவுக்கு இந்த சட்டத்திற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

52 சதவீதம் பேர் இதை எதிர்த்துள்ளனர். 46 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஒபாமா இப்படிச் சொன்னார் - சிகரெட்டை கைவிடுவது என்பது இளைஞர்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். நானும் ஒரு காலத்தில் டீன் ஏஜில் இருந்தவன்தான். இருப்பினும் முயன்றால் முடியாதது இல்லை என்றார் ஒபாமா.

சனி, 13 ஜூன், 2009

மதுரையில் அயல்நாடு தொழிலாளர் நல அமைப்பு தொடக்கம்

மதுரை : மலேசியாவில் வேலை பார்ப்போரின் துயரங்களைத் தீர்ப்பதற்காக அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற ஒன்று மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் கூட்டத்தி்ல ஏராளமானோர் கலந்து கொண்டு தாங்கள் வெளிநாடுளில் பட்ட கஷ்டங்களையும், தங்களது குடும்பத்தினர் பட்ட, பட்டு வரும் துயரங்களையும் கண்ணீருடன் விளக்கினர்.

இவர்களில் பலரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அனிதாகுமாரி என்பவரின் கணவர் ரவி கடந்த 2006ம் ஆண்டு ஏஜென்டு மூலம் மலேசியா போனார். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்திருக்கிறது.

இந்த நிலையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு மனைவியைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், தன்னை சித்திரவதை செய்கிறார்கள் என்று கூறி கதறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லையாம்.

கணவரை மீட்க கோரி மத்திய அமைச்சர் வயலார் ரவி உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். ஒரு மகள், மகனுடன் கண்ணீரும் கம்பலையுமாக கணவரை நினைத்து வேதனையில் மூழ்கியிருக்கிறார் அனிதா குமாரி.

கொய்யாவை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர்...

திருவாரூர் மாவட்டம் சிறுபுலியூரைச் சேர்ந்த வினோத்தின் கதை கொடுமையானது. போலி பாஸ்போர்ட் மூலம் இவரை ஏஜென்ட் ஒருவர் மலேசியா வுக்கு அனுப்பி விட்டார்.

அங்கு போனதும்தான் தான் போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரிய வந்திருக்கிறது வினோத்துக்கு. சாப்பாடு கூட தராமல் கொடுமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மலைப் பகுதியில் கிடைத்த கொய்யாப் பழங்களைப் பறித்து அதை சாப்பிட்டு ஜீவனம் நடத்தி வந்துள்ளார் வினோத்.

எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் கூட கொடுமைகள் தொடர்ந்துள்ளன. சரியாக தூங்கக் கூட விடாமல் வேலைவாங்கியுள்ளனர். பெரும் சிரமத்திற்குப் பின்னர் விட்டால் போதும் என்று தாய் மண்ணுக்கே திரும்பி விட்டார் வினோத்.

இவர்களைப் போல கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தி்னர் வேலை பார்க்கும் இடங்களிலும், சிறைகளிலும் கொடுமைக்குள்ளாகி வருகின்றனராம். இவர்களை மீட்கவும், அங்கு போய் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்கவும், மத்திய அரசும், மாநில அரசும் சற்று அக்கறை காட்ட வேண்டும் என்கிறது அயலக தொழிலாளர் நல அமைப்பு.

நன்றி : தட்ஸ் தமிழ்

புதன், 10 ஜூன், 2009

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.- ஐ.நா.


கடந்த 2008 டிசம்பர் மாதம் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் குழந்தைகள் உட்பட 1350 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சுமார் 5400 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குலை விசாரித்த ஐ.நா விசாரணைக் குழு இஸ்ரேல் போர் குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
யூத மத நீதிபதி ரிச்சர்ட் கோல்ட் ஸ்டோண் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இந்த விசாரணைக் குழு தாக்குதலைப் பற்றிய செய்திகள் மற்றும் புகைப் படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இஸ்ரேலின் அத்து மீறலை உறுதி செய்துள்ளது.

மேலும் பல பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசியது. பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் ஐ.நா. தலைமையகம் உட்பட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியதைப் பற்றி இஸ்ரேல் தெளிவான பதிலொன்றையும் சமர்ப்பிக்கவில்லை.

மேலும் இஸ்ரேலின் அத்து மீறல் சம்பந்தமான பல ஆதாரங்களை விசாரணைக் குழு முன்பாக ஹமாஸ் இயக்கமும் அளித்திருக்கின்றது.

எல்லாமே இலவசம்...?

சேலை வாங்கினால் கைக்குட்டை இலவசம். மாடுவாங்கினால் கன்றுக்குட்டி இலவசம். இது வழமையாக கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் நம் தங்கத்தமிழகத்திலோ என்னை ஆட்சியில் அமரவைத்தால் அரிசி முதல் அல்வா வரை இலவசம். இலவசப் பொருட்கள் உன்மையிலேயே ஏழைகளுக்கு பயனளிக்கிறதா..?.

அன்மையில் பாராளுமன்றத்திலே லால்லு பிரசாத் அவர்கள் பேசினார். அரசு வழங்கும் இலவசப்பொருட்களினால் ஏழைகள் பயனடைவது இல்லை. மாறாக அரசியல்வாதிகள் தான் பயன் அடைகிறார்கள். நீங்கள் இலவசமாக வழங்கும் அரிசியை வடித்து வைத்துக்கொண்டு என்னசெய்வது அதற்கு ஊற்றிக்கொள்ள யார் கொடுப்பார்கள். என்று அவருக்கெ உரிய லொல்லுடன் பேசினார்.

" நீ பசித்திருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாக வழங்குவதை விட நீ அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு அது அவனுக்கு அனுதினமும் சோறு போடும்" இது சீனப் பழமொழி இது ஏன் நம் தமிழக அரசியல் தழைவர்களுக்கு புரியவில்லை.

அரசியல்வாதிகள் தான் கொடுக்கிறார்கள் என்றால் இந்த மக்கள் ஏன் மயங்கினார்கள். இது நம் நாட்டிற்க்கு ஆரோக்கியமானதல்ல இலவசத்தை விட்டுவிட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குங்கள். அனைவருக்கும் வேலை என்ற நிலை வந்துவிட்டால். சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிச்செல்லலாம் நாம். இதற்கு தடைக்கற்களாக இருக்கும் இலவசம் என்னும் பிச்சையை..? நாம்தான் தடுக்கவேண்டும். ஆம் நம் காசை வாங்கிக்கொண்டு நமக்கே பிச்சைபோடுகிறார்கள். அய்யா...... ஒரு தொலைக்காட்சிப்பெட்டி எம்புட்டு காசு இன்னக்கெல்லாம் ரூ.1500 வரும் அத இலவசமா வாங்கிக்கிட்டு மல்லாக்க படுத்துக்கிட்டு சீரியல் பாக்குறோம். ஆனா நாம் அன்றாடம் பயன்படுத்தும் பஸ்கட்டணம்,மளிகை பொருட்கள்,மின்கட்டணம், இன்னும் எத்தனை எத்தனையோ கட்டணங்களை குறைத்தால் (இலவசமாக அல்ல) ரூ 1500 என்ன ரூ10000 க்கே சொந்தமா தொலைக்காட்சிப்பெட்டி வாங்கலாமே..?. இது ஆரம்பம் தான் இது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டால்.... இனி வரும் காலங்களில் குடிமகன்களுக்ககு போத்தல் இலவசம், புகைமகன்களுக்கு பாக்கெட் இலவசம் என்பார்கள் எச்சரிக்கை "விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொல்வார்"