புதன், 24 ஜூன், 2009

அமெரிக்காவில் ஆவி பிடிக்கத் தடை...?

இளைஞர்களிடையே நிலவும் புகை பிடிக்கும் பழக்கத்திற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டம் அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளது.

குடும்ப புகை பிடித்தல் தடை மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற பெயர் கொண்ட இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை அந்நாட்டு உணவு மற்றும் மருந்துத்துறை மேற்கொள்ளும்.

இந்த சட்டத்தின் மூலம் இளைஞர்களை அதிகம் கவரும் வாசனையான சிகரெட் மற்றும் சிறிய வகை சிகரெட்கள் தடை செய்யப்படும்.

மேலும், லைட்ஸ், மைல்ட் என்ற பெயரில் வெளி வரும் சிகரெட்களுக்கும் தடை விதிக்கப்படும். இதுதவிர புகையிலைப் பொருட்கள் மீது கண்டிப்பாக இனி எச்சரிக்கை வாசகங்களையும் பொறிக்க வேண்டும்.

அதேபோல இனிமேல் தயாரிக்கப்படும் சிகரெட்களில் நிக்கோடின் அளவையும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் குறைக்க வேண்டும்.

இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் நடந்தது.

அப்போது ஒபாமா பேசுகையில் பல காலமாகவே நாம் எதிர்பார்த்து வந்த மாற்றத்தை இந்த சட்டம் தரும். நமது குழந்தைகளை அபாயத்திலிருந்து காக்க இந்த மாற்றம் வந்துள்ளது என்றார்.

அமெரிக்காவில் புகை பிடிக்கும் பழக்கத்தால் பலர் இறக்கிறார்கள். இறப்பு அளவு குறைந்த போதிலும் கூட ஆண்டுக்கு 4 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆண்டுதோறும் செலவழிக்கும் தொகை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அரசின் இந்த சட்டத்தை பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஆல்ட்ரியா குரூப் வரவேற்றுள்ளது. இருப்பினும் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீய அம்சங்கள் குறித்து இளைஞர்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என இது கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் மால்போரோ, விர்ஜீனியா ஸ்லிம்ஸ், பேசிக், செஸ்டர்பீல்ட் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்க இளைஞர்களிடையே கணிசமான அளவுக்கு இந்த சட்டத்திற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

52 சதவீதம் பேர் இதை எதிர்த்துள்ளனர். 46 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஒபாமா இப்படிச் சொன்னார் - சிகரெட்டை கைவிடுவது என்பது இளைஞர்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். நானும் ஒரு காலத்தில் டீன் ஏஜில் இருந்தவன்தான். இருப்பினும் முயன்றால் முடியாதது இல்லை என்றார் ஒபாமா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக