துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஏப்ரல், 2009

அன்னியத் தொழிலாளியின் உழைப்பை உறுஞ்சும் ஒட்டுன்னிகள்..!


கொளுத்தியெடுக்கும் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர். சாப்பாட்டுக்குக் கூடப் போதாத தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தாங்கள் அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப்படுவதை எதிர்த்தும் அவர்களது போராட்டம் தொடங்குகிறது.

போராட்டத்தை ஒடுக்கக் கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இராணுவம் வரவழைக்கப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ஹெலிகாப்டரிலிருந்து கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசப்படுகின்றன. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை. முன்னணியாளர்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுகின்றனர்.

பல்லாயிரம் தமிழர்களின் கனவு தேசமாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில்தான் இவையனைத்தும் நடைபெற்றன. அங்கே போராடி, சிறை சென்ற தொழிலாளர்களில் பலர் தமிழர்கள். துபாயில் வேலை என்பதை மக்கள் மிகவும் பெருமையாகக் கருதுகின்றனர். அதனால்தான் துபாய்க்கு அனுப்புவதாகச் சொல்பவர்களிடம், பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றனர்.

துபாயின் ஜொலிக்கும் ஆடம்பர மாளிகைகளுக்குப் பின்னால் பல லட்சம் தொழிலாளர்களின் அயராத உழைப்பு இருக்கிறது. தங்களது இரத்தத்தை வியர்வையாய்ச் சிந்தி, அந்தப் பாலைவன தேசத்தைச் சொர்க்க பூமியாக மாற்றிவரும் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. நாள் முழுவதும் நகரத்தில் கடுமையாக வேலை செய்யும் அவர்கள், அந்நகரத்தில் தங்குவதற்கு அனுமதியில்லை. நகரத்துக்கு வெளியே பாலைவனத்துக்கு அருகேயுள்ள தொழிலாளர் குடியிருப்பில், ஒரே அறையில் பத்து, பன்னிரெண்டு பேர்வரை ஆட்டு மந்தைகளைப் போல அடைக்கப்படுகின்றனர்.

அதிகாலை எழுந்து சமைத்துவிட்டு வேலைக்குச் சென்றால், வேலையிலிருந்து திரும்ப நள்ளிரவாகிவிடும். வேலைப் பளுவோ மிகவும் அதிகம். வேலை செய்யும் இடத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதியில்லை. அதற்கென அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டும் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமோ மாதத்திற்கு இந்திய ரூபாயில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரைதான். பல லட்சங்கள் கடன் வாங்கி அங்கு செல்லும் தொழிலாளர்கள் அந்தச் சம்பளத்தைக் கொண்டு வாங்கிய கடனைக் கூட அடைக்க முடியாது.

குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை வேலை செய்தால்தான் ஓரளவுக்காவது சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவும் முடியாது. அப்படிச் செய்யவேண்டுமானால் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கவேண்டும். இதனால், வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளி ஆண்டுக்கணக்கில் குடும்பத்தைப் பிரிந்து வாழவேண்டும். திருமணமான சில மாதங்களில் குடும்பத்தைப் பிரிந்து போய், குழந்தை வளர்ந்த பிறகு வருபவர்களும் உண்டு.

தங்களது நிலைபற்றி ஒரு இந்தியத் தொழிலாளி கூறும்போது, ""நாங்கள் துபாய்க்கு வருவதற்கு முன்னர் பல கனவுகளோடு வந்தோம். ஆனால் இங்கு எங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது'' எனத் தொழிலாளர்களின் குமுறலை வெளிப்படுத்தினார். இன்னொருவரோ, ""சூப்பர்வைசர் வேலை எனக் கூறினார்கள்; அதனால் ஊரில் வளர்த்து வந்த ஆடுமாடுகளை விற்று, நிலத்தை அடமானம் வைத்துவிட்டு வந்தேன்; ஆனால் இங்கு வந்தவுடன் ஒட்டகம் மேய்க்க விட்டுவிட்டார்கள்'' என்று வருந்துகிறார். துபாய்க்கு வந்தவுடன், தொழிலாளர்களின் கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்டு) நிறுவனத்தினர் பிடுங்கிவைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் நிறுவனத்தினர் சொல்லுக்குத் தொழிலாளர்கள் கட்டுப்படவேண்டியிருக்கிறது. 8 மணிநேர வேலை, மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஓவர்டைம் என்று கூறப்பட்டாலும், உண்மையில் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டியிருக்கிறது.

இவற்றையெல்லாம் பொறுத்துப் பார்த்தும் பலனில்லாததால், தொழிலாளர்கள் ஒன்றுகூடிப் போராட ஆரம்பித்தனர். கடந்த நவம்பரில் துபாயின் மிகப்பெரிய கட்டிட நிறுவனமான ""அராப் டெக்''கின் 40,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்தியர், பாகிஸ்தானியர் என்ற தேச முரண்பாடுகளைக் கடந்து, இந்து, முஸ்லீம் என்ற மதப்பிரிவினைகளைக் கடந்து, தொழிலாளி என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து அவர்கள் நடத்திய போராட்டம் உலகின் கவனத்தையும் ஈர்த்தது. விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் போது 3 தொழிலாளர்கள் இறந்ததையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடங்கியது. இதேபோல குவைத்திலும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. கடுமையான பாலைவன வெய்யிலில் தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை வாங்குவது, பாதுகாப்புக் கருவிகள் எதுவும் தராமல் ஆபத்தான வேலைகளைச் செய்யச் சொல்வது, குறைவான கூலி ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராடினர்.

போராடிய தொழிலாளர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். கசையடி பெற்றனர். முன்னணியாளர்கள் தாக்கப்பட்டனர். போலீசும் இராணுவமும் வரவழைக்கப்பட்டு போராட்டங்கள் கடுமையாக நசுக்கப்பட்டன. தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது வாய்மூடி மவுனமாக இருந்த இந்தியத் தூதரகம், தொழிலாளர் போராட்டம் வெடித்தவுடன் அதனைத் திசைதிருப்பும் விதமாக, குறைந்தபட்ச கூலி என்ற கருத்தை மட்டும் முன்வைத்தது.

இந்த போராட்டத்தினால் உருவான நெருக்கடியினை சமாளிக்க துபாய் அரசாங்கம் தொழிலாளர் நலச்சட்டம் என்ற பெயரில், தொழிலாளர் நலனுக்கே எதிரான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டம் வேலை நிறுத்தத்தை தடை செய்வதோடு, அதில் ஈடுபடுபவர்களையும் கடுமையாக தண்டிக்க வழிவகை செய்கிறது. உழைக்கும் பெண்களுக்கு எதிரான விதிகளை இச்சட்டம் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு கூட்டாட்சியில் மட்டும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை உரிமையைக் கூட இந்தச் சட்டம் வழங்க மறுக்கிறது.

உலகமயமாக்கலின் பெயரில் தேசம் கடந்து பன்னாட்டு நிதி மூலதனங்கள் துபாயில் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக்கொண்டு பாலைவனத்துக்கு நடுவே மிகப்பெரிய நகரங்களை உருவாக்குவது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களைக் கட்டுவது, கடலுக்கு நடுவில் ஈச்சமர வடிவிலான ஓட்டல்களைக் கட்டுவது என ஒரு மாய உலகைக் கட்டியமைக்கும் பணியில் ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டுள்ளன. அதற்கு தெற்காசிய கூலித்தொழிலாளிகளின் அடிமை உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கின்றனர். ஐரோப்பிய நகரங்களுக்கு இணையான தரத்தில், அதே சமயம் மிகவும் மலிவான கூலியில் நகரங்களை உருவாக்க முடிகிறது என்பதால், உலக முதலாளிகள் துபாயில் முதலீடு செய்ய போட்டி போடுகின்றனர். இப்படி மூலதனம் பல்கிப் பெருக, தங்கு தடையற்ற சுதந்திரம் வழங்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தொழிலாளர்களது சுதந்திரத்தை மட்டும் கிள்ளுக்கீரையாக்கியுள்ளன.

அண்மைக்கால ஏகாதிபத்திய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு அரபு நாடுகளில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கின்ற நிலையில், பெறுகின்ற சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை உணவுக்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி துபாய் சென்று வேலைக்கு சேர்ந்தவர்கள், அந்தக் கடனை எப்படி அடைப்பது எனத் தெரியாமல் பரிதவிக்கின்றனர். விட்டால் போதும் என்று சொந்த நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேர் வரை இந்தியாவுக்கு திரும்ப விமானச் சீட்டுக்குப் பதிவு செய்துள்ளனர்.

மலிவான கூலி கொடுத்து தொழிலாளர்களை சுரண்டி வரும் அரபு நிறுவனங்களோ தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக இல்லை. ""இரும்பு, கற்கள், சிமெண்ட்டு என அனைத்துக் கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. ஆனால், தொழிலாளர்களின் விலை மட்டும் அப்படியே மலிவாக இருப்பதுதான் எங்களுக்கு சவுகரியமாக இருக்கிறது'' என்று அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.

இந்திய தொழிலாளர்களை கரும்புத் தோட்டங்களில் கசக்கி பிழிந்து, தன்னை வளப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போன்று, தெற்காசிய நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது துபாய். துபாயின் உயர்ந்து நிற்கும் மாளிகைகளுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இத்துயரங்களும் குமுறல்களும் எரிமலையாக வெடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.


நன்றி: மதி- தமிழ் அரங்கம்

வியாழன், 16 ஏப்ரல், 2009

துபாயின் உயரிய "MRM" விருது பெற்றது தமிழரின் நிருவனம்.?



துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.


இன்று காலை துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.
அனுப்பியவர் : கரிசை. ஹைதர். துபை
நன்றி: சாருகேசி

செவ்வாய், 31 மார்ச், 2009

சாமான்ய மக்களை சந்திக்கு வரவழைத்த துபாயின் மேற்க்கத்திய கலாச்சாரம்..!

வளைகுடா கடற்கரையோரம், துபாய் நகரை பார்த்த படி நிற்கிறது "பெர்ஜ் அல் அரப்" என்று அழைக்கப் படும், பாய்மரக்கப்பல் வடிவில் கட்டப்பட்ட, ஏழு நட்சத்திர ஹோட்டல். ஆமாம், எதையும் பெரிதாகவே சிந்தித்து கட்டப்பட்ட, ஐந்து நட்சத்திரத்தை விட வசதிகள் நிறைந்த ஏழு நட்சத்திர விடுதி அது. அதன் மிகக்குறைந்த அறையின் ஒரு நாள் வாடகை 800 டாலர்கள். துபாய் காரருக்கு எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய ஆசை. அதனால், ஹோட்டல் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் அன்ரே அகசியை அழைத்து வந்து, உச்சியில் இருக்கும் ஹெலி இறங்கு தளத்தில் டென்னிஸ் விளையாட வைத்தார்கள்.

துபாய் நாட்டின் சின்னமாகி விட்ட பெர்ஜ் அல் அரப்கட்டியதுடன் நின்று விடாது, நவீன உலக அதிசயங்கள் அமைக்க வேண்டுமென்ற ஆசையில், கடலுக்குள் பனை மர வடிவில், உலகப் பட வடிவில், என்று செயற்கை தீவுகளை வேறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செயற்கை தீவுகளில், நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புக்களை கட்டி ரியல் எஸ்டேட் இல் விற்க இருக்கிறார்கள்.

துபாய் முதலாளிகளுக்கு எண்ணை விற்று வந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வதென்ற கவலை. அதனால் இப்படி பிரமாண்டமான கட்டுமானப் பணிகளை கற்பனை பண்ணி கட்டி கொண்டிருக்கிறார்கள். பணம் உள்ளவர்களின் வாழ்கை வசதிகளை உயர்த்துவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயற்படும் அரசாங்கம், சாதாரண மக்களுக்காக போக்குவரத்து துறையை விருத்தி செய்யவில்லை. அதை விட கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும், நவீன உலக அதிசயங்களை கட்டிய, கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் 160 டாலர்களுக்கு மேல் போவதில்லை. மேலும் குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கட்டிடங்கள் விழுந்து மடிந்தவர்கள் பலர். இந்திய, பாகிஸ்தானிய கூலி தொழிலாளர்களன அவர்களை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.. அவர்களின் பெறுமதி சில நூறு டாலர்கள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டு நவீன அடிமைகள் அவர்கள்.
2005 ஜனவரி மாதம், ஹஜ் பெருநாள் தொடங்க சில நாட்களே இருந்த காலம். மெக்கா போகும் யாத்திரீகர்கள் எனது விமானத்திலும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஏன் துபாய் வரவேண்டும்? பேச்சு கொடுத்ததில் சில உண்மைகள் வெளி வந்தன. கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த யாத்திரீகர்கள், ஒரு சவூதி அராபிய பிரயான முகவர் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டவர்கள். ஒவ்வொரு பயணியிடமும் நிறைய பணம் வாங்கி கொண்டு, குறைந்த செலவில் டிக்கெட் எடுத்து நாடு நாடக சுற்றி போகும் படி வைத்திருந்தார்கள். பாவம் இந்த அப்பாவி யாத்திரீகர்கள், தாமாகவே பிரயாணம் ஒழுங்கு பண்ண அவர்களுக்கு உரிமையில்லை. சவூதி பிரயான முகவர்களின் ஏகபோக உரிமை மதம் சம்பந்தமான புனித பயணத்தில் கோடி கட்டிப் பறக்கிறது. துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, பாஸ்போர்டை வைத்து பிரயாணிகளை பிரித்து விசா குத்திக் கொண்டிருந்தார்கள். ஐக்கிய அரபு ராச்சியங்கள், மற்றும் பணக்கார வளைகுடா நாடுகளின் பிரசைகளுக்கு முன்னுரிமை, அதற்கு அடுத்ததாக அமெரிக்க அல்லது பிற பணக்கார நாடுகள், கடைசியாக வறிய நாடுகளை சேர்ந்த அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த பாகுபாடு துபாய் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு எமிறேடின் நிர்வாக அரசியல். அங்கே நீதி கூட இந்த பின்னணியை வைத்து தான் வழங்கப் படுகின்றது.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, அப்போது ஜனவரி மாதம் என்பதால் வெயில் கடுமையில்லை. சற்றே குளிரான காலநிலை. ஊர் சுற்றிகளுக்கு ஏற்ற காலநிலை. அங்கே பொது போக்குவரத்து அரிது. அதனால் டாக்ஸி, அல்லது தனியார் வாகனம் மட்டுமே தஞ்சம். நான் போய் நின்ற இடம் பழைய துபாய் நகரம். பஜார் நகரம் என்றும் சொல்லலாம். நகை கடைகள், பல சரக்கு கடைகள், மலிவான தங்குவிடுதிகள், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள்.... இப்படி துபையின் அந்த பகுதி மட்டும் ஒரு சராசரி இந்திய நகரம் மாதிரி காட்சியத்தது. அங்கிருந்து ஒரு சில கி.மி. தூரம் போனால் தான் நவீன துபாய் நகரம் ஆரம்பிக்கிறது. அமாம், துபாய் நகரம் இன்னமும் புது புது குடியிருப்புகள் அமைக்கப் பட்டு பெருகிக் கொண்டே போகின்றது. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய அல்லது (எமிரேட்) அரேபியர்கள் மட்டுமே வசிக்கும் நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புகள், அவற்றின் மத்தியில் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட நியூ யார்க் போன்ற நவீன நகரங்கள்அவை. நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச பிரயாணிகள் இளைப்பாறும் கடற்கரை, இப்போது கட்டப் பட்டுகொண்டிருக்கும் உலக அதிசயங்கள் எல்லாமே அங்கே தான்.
இந்த நகரமயமாக்கப் பட்ட கட்டடக் காட்டுக்கு வெளியே, பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கிறது நவீன அடிமைகளின் முகாம்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென் ஆசிய நாட்டு கூலி உழைப்பாளிகள், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். தொழில் ஒப்பந்தம் தொடங்கும் நாளன்றே அவர்களின் கடவுச்சீட்டு, சட்டத்திற்கு மாறாக, வாங்கி வைக்கப் படுகின்றது. குறைந்தளவு வசதிகளை கொண்ட முகாம்களில், ஒரு அறைக்குள் எட்டுபேர் என்று தங்க வைக்கப் படுகின்றனர். வேலை செய்யும் இடத்திற்கு தினம்தோறும் கம்பெனி பஸ், தொழிலாளரை ஏற்றி இறக்கும். ஒரு தொழிலாளிக்கு சம்பளம் உட்பட ஆகும் செலவு அதிக பட்சம் முன்னூறு டாலர்கள் மட்டுமே என்பதால், அவர்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், பல கம்பெனிகள் பெருமளவு லாபம் எடுக்கின்றன. மலிவான உழைப்பாளிகள் உருவாக்கும் உற்பத்தி பொருட்கள், அல்லது சேவைகள் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்வாக இருப்பதால், இந்த கொள்ளை லாபம் சாத்தியமாகின்றது. உண்மையில் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், பொறாமைப்படும் அளவிற்கு துபாய் பொருளாதாரம் அடிமைகளால் கட்டப்பட்டு வருகின்றது. அங்கே தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்களுக்கு தடை. வேலை நிறுத்தம் சட்டவிரோதம். வர்த்தக நிறுவனங்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. மொத்தத்தில் அது ஒரு முதலாளிகளின் சொர்க்கம்.
கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல, விற்பனையாளர்கள், எழுதுவினைஞர்கள், மானேஜர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்போரும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு கூட்டி வரப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சாதாரண வெளிநாட்டு தொழிலாளி எடுப்பதை விட பல மடங்கு அதிகம் என்றாலும், ஒரு சாதரண எமிரேட் தொழிலாளி எடுக்கும் சம்பளத்தை விட குறைவு. சில நேரம் அலுவலக பணியில் இருக்கும் ஐரோப்பியரை விட குறைவு எனலாம். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மேல்நிலை மனேஜர்களாக பதவியில் உள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் தாயகத்தில் கிடைக்கும் அதே அளவு, அல்லது சற்று கூட. இதனால் சில தகுதி குறைந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியர்கள் கூட துபாயில் செல்வந்த வாழ்கை வாழ்கின்றனர்.
பண்டைய ரோம் நகரத்தில், விவசாய கூலிகள் முதல் ஆசிரியர்கள் வரை பிற நாடுகளில் இருந்து வந்த அடிமைகளே வேலை செய்தனராம். ரோம் மக்கள் அரசு துறைகளிலும், இராணுவத்திலும் மட்டுமே பணி புரிந்தனராம். இதே போன்ற சமூக கட்டுமானம் எமிரேட் முழுக்க உள்ளது. நாட்டின் பிரசைகள் அரசாங்கத்திலும், பாதுகாப்பு படை களிலும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். மேலும் எல்லா வகையான வர்த்தக நிறுவனத்திலும் ஒரு எமிரேட் பிரசைக்கு அரைவாசி பங்கு இருக்க வேண்டும். இதனால் பல எமிரேட் பிரசைகள், சும்மா இருந்தே பணம் சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரும் முதலீட்டில் நடத்தப் படும் கம்பெனிகள் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பிய முதலளிகளுடயது. இடைதர மற்றும் சிறிய கம்பெனிகளை இந்தியர்கள் நடத்துகின்றனர். வெளிநாட்டினர் துபாயில் எந்த சொத்தும் வாங்க உரிமையில்லை. அவர்கள் வீடு வாங்க, வியாபார நோக்குடன் அனுமதித்தாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், அவற்றை விற்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் அல்லது எமிரேட் காரர்கள் லாபம் சம்பாதிக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணை இருப்பு குறைந்து வருவதால் இது போன்ற வர்த்தகத்தில் துபாய் நாட்டம் காட்டி வருகின்றது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்க கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால், துபாயில் பல உலக வர்த்தக கழகங்கள் தமது விற்பனை சாலைகள், போன்றவற்றை திறந்து வைத்துள்ளன. மேலும் வரி சலுகை, சகல வசதிகளுடனான விமான நிலையம், துறைமுகம், குறைந்த கூலிக்கு பிடிக்க கூடிய தொழிலாளர்கள், ஆகிய விஷயங்கள் பல முதலாளிகள் துபாயை தெரிவு செய்ய காரணம்.
துபாய் இவ்வாறு முதலாளிகளின் சொர்க்கபுரி மட்டுமல்ல, உல்லாச பிரயாணிகளுக்கும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. துபாய் அருங்ககாட்சியகம் குறிப்பிடத்தக்கது. எண்ணை கண்டுபிடிக்கும் வரை துபாய் நகரம் எப்படி காட்சியளித்தது? அதன் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? போன்றவற்றை அறிய விரும்பினால் அது ஏற்ற இடம். மேலும் துபாய் வணிகர்கள் ஒரு காலத்தில் முத்துகளை உலகம் முழுக்க விற்று வந்தனர். முத்து குளிக்கும் முறை, பற்றி ஒரு பகுதி விளக்குகிறது. இன்னொரு பகுதி பாலை வன சோலையில் பேரீச்சை, பிற விவசாயம் பற்றி விளக்குகின்றது. இவை எல்லாம் நேரே பார்ப்பது போல பொம்மைகளை வைத்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் பார்ப்பதை விட்டு, பாலைவன கிராமம் ஒன்றினை அங்கிருந்த வீடுகள், கிணறுகள், தோட்டங்கள், ஒட்டகங்கள்இவ்வாறு அப்படியே இருந்த மாதிரி பார்க்க விரும்பினால், "ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜ்" சிறந்த இடம். ஹட்டா துபாய் நகரில் இருந்து 115 கி.மி. கிழக்கு பக்கமாக இன்னொரு எமிரேட் புஜைரா நோக்கி போகும் பாதையில்,ஹசார் மலைகளுக்கு நடுவில் அமைந்திள்ளது. மலைகளின் பின்னணியில் அந்தக் கிராமத்தின் அமைவிடம் அதன் அழகை மெருகூட்டுகின்றது. ஹட்டாவில் தான் எமிரேட்டின் மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் பிற பாலைவன வளைகுடா நாடுகளை போலன்றி, எமிரேட்கிழக்கு பகுதியில் விவசாயம் நடக்கிறது. அதற்கு நீர்பாசன வசதி இந்த அணை மூலம் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியங்கள் ஏழு எமிரேட்களை சேர்த்து உருவானது. அந்த ஏழும் சில சுயநிர்ணய உரிமைகளுடன் ஒன்றிணைந்து ஒரே தேசமாக இயங்குகின்றன. ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ஷேக் அரசியல்/நிர்வாக தலைவராக உள்ளார். ஷேக் என்பது மன்னரை குறிப்பதல்ல. பண்டைய இஸ்லாமிய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஷேக் என்ற ஒருவர் நிர்வாகத் தலைவராக தெரிவு செய்யப் பட்டு, அரசியல் நிர்வாக அதிகாரம் வழங்கப் பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, அதுவும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு தான் இந்த ஷேக்குகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக, குறுநில மன்னர்கள் போல மாறினார்கள். அபுதாபி, அதிக வருவாய் கொண்டதால், அது தலைநகரம் ஆகி விட்டது. அபுதாபி ஷேக், காலம் சென்ற சையிது, தேசத் தந்தை போலே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். அவரது ஆளுயர உருவப் படங்கள் எமிரேட் எங்கும் காணலாம். அது மட்டுமல்ல, அவருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆடம்பர மாளிகைகள், ஒவ்வொரு நகரிலும் உள்ளது. இராக்கில் சதாம் உருவப்படங்களை, மாளிகைகளை, கேலி செய்த சி.என்.என். போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது வியப்புக்குரியது. அபுதாபி, துபாய் மட்டுமே எண்ணை வளம் காரணமாக, பணக்கார எமிரேட்களாக உள்ளன. அவை புஜைரா போன்ற எண்ணை இல்லாத "வறிய" எமிரேட்டுகளுக்கு நிதி உதவி செய்து முன்னேற்றி வருகின்றன. சட்டங்கள் கூட ஒவ்வொரு எமிரேட்டுக்கும் மாறுபடும். துபாய் மேலைத்தேய நாடுகளை போல தாராளவாத கொள்கையை கடைபிடிகின்றது. அங்கே இரவு களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், ஏன் விபசாரத்துக்கு கூட சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. துபாய் அருகிலேயே இருக்கும் ஷார்ஜா என்ற இன்னொரு எமிரேட் இதற்கு மாறாக, மத ஒழுக்க கட்டுபாடுகளை கடுமையாக கடைப் பிடிக்கின்றது. அங்கே மதுபானம் போன்றனவற்றிகு முற்றாக தடை. அபுதாபி ஓரளவு சுதந்திரமும், ஓரளவு கட்டுபாடுகளையும் கொண்டுள்ளது. இதனால் உல்லாச பிரயாணிகளையும், வர்த்தக நோக்கோடு வருபவர்களையும் துபாய் மட்டுமே கவர்வது வியப்புக்குரியதல்ல.
நன்றி: "கலையகம்" கலையரசன்