மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு…???

"இருதரப்பும் சேர்ந்து வாழ்வதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது” என்கின்றனர் பலரும் அயோத்தி தீர்ப்பு குறித்து. பி.ஜே.பி, சாதுக்கள், பஜ்ரங்கதள், வி.எச்.பி மிகுந்த உற்சாகத்தோடு தீர்ப்பை வரவேற்று கொண்டாடிகின்றனர். ‘ ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழி பிறந்துவிட்டது’ என்றும், ‘தேசீய ஒருமைப்பாட்டிற்கு புதிய அத்தியாயத்தை இந்த தீர்ப்பு எழுதியிருக்கிறது’ என்றும் அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்று அறிக்கை விட்டிருக்கின்றனர். "அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டப்படும்” என பிரவீன் தொகாடியா ஆனந்தக் கூச்சலிடுகிறார். காங்கிரஸ் கட்சி புன்னகையோடு, “தீர்ப்பை இருதரப்பாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என சொல்லி வருகிறது. மூஸ்லீம் அமைப்புகள் தீர்ப்பீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லப்போவதாக சொல்கின்றன. தீர்ப்பின் உள்ளடக்கத்தையும், சாதக பாதகங்களையும் இந்தக் காட்சிகளும் செய்திகளும் சொல்கின்றன.

‘முப்பரிமாண தீர்ப்பு’ என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற தீர்ப்புகளை எழுதியிருக்கிற மாண்புமிகு நீதிபதிகள் மூவருமே ஒத்துப்போன கருத்தைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அகர்வால், ஷர்மா இருவரும் மசூதிக்கு முன்பாக அங்கு ராமர் கோவில் இருந்ததற்கான அடையாளம் இருந்ததாக சொல்கின்றனர். அதனை இடித்து மசூதி கட்டப்பட்டதாக முடிவுக்கு வருகின்றனர். நீதிபதி கானோ, மசூதிக்கு முன்பாக அங்கு ஏற்கனவே இடிந்த அல்லது சிதைந்த கட்டிட அடையாளங்களை அறிய முடிவதாகவும், கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் சொல்கின்றார். கான் மற்றும் அகர்வால் இருவரும் நிலத்தை மூன்றாக பிரித்து பங்கு வைக்கச் சொல்கின்றனர். ஷர்மா முழுவதையும் இந்துக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். நீதிபதிகளின் வித்தியாசமான இந்த பார்வைகளில் இருந்த ‘மெஜாரிட்டிகளை’யெல்லாம் சேகரித்து பாபர் மசூதி - ராம ஜென்மபூமி விவகாரத்தின் தலையெழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

“தேவதைகள் தரையிறங்கி நடப்பதற்கு அஞ்சுமளவுக்கு, பிரச்சினைக்குரிய நிலத்தில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை எங்களால் முடிந்த அளவுக்கு நீக்க முயன்றிருக்கிறோம்” என்று தீர்ப்பினை எழுத ஆரம்பித்திருக்கிறார் நீதிபதி கான். பிரபஞ்சத்தின் அழிவு மற்றும் மறு ஆக்கம் குறித்த ரிக்வேதங்களின் சுலோகங்களை மேற்கோளிட்டு தீர்ப்பினை எழுத ஆரம்பித்திருக்கிறார் நீதிபதி அகர்வால். மொத்தம் நீளும் தீர்ப்பின் 6000 பக்கங்களில் இந்த அகர்வால் மட்டும் கிட்டத்தட்ட 5000 பக்கங்கள் எழுதியிருக்கிறார். இந்த பின்னணியில் வாசிக்கும்போது தீர்ப்பின் நிறம் தெளிவாகிறது. தீர்ப்பின் திசை இங்கிருந்து நகர ஆரம்பிக்கிறது.

சர்ச்சைக்குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதிகள் அகர்வாலும், ஷர்மாவும் தெரிவித்துள்ளனர். அகழ்வராய்ச்சியில் பாபர் மசூதிக்குக் கீழே அங்கு ஏற்கனவே இருந்த ஒன்றின் சிதிலங்களில் தூண்கள் போன்றவை இருப்பதாகவும், வர்ணப்பூச்சுக்கள் தெரிவதாகவும், பல விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்த சிதிலங்களில் தேவனகிரி எழுத்து வடிவம் தெரிவதாகவும் சொல்லப்பட்டது. அராபிய எழுத்துக்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்து அமைப்புகளோ, அப்போதே “ஆஹா, அது ராமர் கோவில்தான் என்றும், 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும்” கும்மாளம் போட்டு பரப்பின. ஜைன மதத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பு, அந்த சிதிலங்கள், தங்கள் மதத்தைச் சார்ந்தவை போலிருப்பதாகவும், எனவே தங்களுக்கு அந்த இடத்தில் உரிமையுண்டு என ஒரு மனு தாக்கல் செய்தனர். அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதற்கிடையில் அயோத்தியில் அகழ்வராய்ச்சி நடத்திய குழு, அகழ்வராய்ச்சியின் விதிகளை பின்பற்றவில்லை என பணிகளை நிறுத்தவும் நேரிட்டது. பல வரலாற்று ஆசிரியர்கள், அகழ்வராய்ச்சியின் அறிக்கை மீதான ஏராளமான சந்தேகங்களை எழுப்பி இருந்தனர்.

இத்தனை குழப்பங்களுக்கும் தெளிவற்றத் தன்மைகளுக்கும் மத்தியில் நீதிபதிகள் ஷர்மாவும், அகர்வாலும் திட்டவட்டமாக தங்களுக்குத் தேவையான சில அடையாளங்களை தேர்ந்தெடுத்து அது ராமர் கோவில்தான் என முடிவுக்கு வந்து தங்களது ‘நம்பிக்கை’யை நிலைநாட்டி இருக்கின்றனர். அகழ்வராய்ச்சியில் கட்டிட அமைப்பின் சிதிலங்கள் மட்டும் காணப்படவில்லை. மிருகங்களின் எலும்புக்கூடுகளும் காணப்பட்டு இருந்தன. இதுகுறித்து எழும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. ‘மிருகங்களை காணிக்கை செலுத்தும் வழக்கம் இந்துக்களிடம் இருந்ததற்கான’ ஆதாரங்களை பழம் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி அர்த்தம் சொல்லி இருக்கின்றனர் நீதிபதி அகர்வாலும், ஷர்மாவும். அவர்கள் இருவரும் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றனர்.

ஆக, அங்கு ஏற்கனவே ஒரு இந்துமதக் கோவில், அதுவும் ராமர் கோவில் இருந்த முடிவுக்கு கொண்டு வந்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கு அல்லது பணிக்கு தாவுகின்றனர். ‘கோயிலை இடித்துவிட்டு மசூதியைக்கட்டியது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதை மசூதியாகக் கருத முடியாது’ என்கின்றனர். இந்துமதம் மட்டுமல்ல முஸ்லீம் மதக் கோட்பாடுகளும் அத்துப்பிடிதான் போலும். ஆனாலும் இந்த இடத்தில் யாரோ திருதிருவென விழிப்பது மாதிரி இருக்கிறது. கோவில் இடிக்கப்பட்டதா, யார் இடித்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும், சான்றுகளும் நிறுவப்படாமலே ‘கோவில் இடிக்கப்பட்டது’ என்று போகிற போக்கில் சொல்லிக் கடந்து விடுகிறார்கள். இதற்கு மேற்கோள்காட்ட வேதங்களிலோ, உபநிடதங்களிலோ, பழம் இலக்கியங்களிலோ வார்த்தைகள் எதுவும் அகப்படவில்லை போலிருக்கிறது. அதற்கென்ன. கோவில் இருந்தது என்றாகி விட்டது. மசூதியே இல்லை என்றுமாகிவிட்டது.

பாபர் தன்மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில்.

கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

பாபரின் இந்த உயில் மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும். மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.

இனி அடுத்த கட்டம் ஒன்றிருக்கிறது. சகிப்புத்தன்மையையும், தேசீய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியாக வேண்டும். அதற்கு வழி காட்டப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு பங்கு வைத்து கொடுக்க வேண்டும் என்கிறது தீர்ப்பு. கரசேவை, மசூதி இடிப்பினை அடுத்து அயோத்திப் பிரச்சினையின் அடுத்த அத்தியாயமாய் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது. இதுவே கடைசி அத்தியாயமாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகின்றனர். கலைஞர் கருணாநிதியும், செல்வி.ஜெயலலிதா அவர்களும் கூட இவ்விஷயத்தில் இணக்கமான கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

முஸ்லீம் அமைப்புகள் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது என்று அறிவித்தவுடன், இந்துமகாசபையும் ‘முஸ்லீம்களுக்கு ஒரு பங்கு கூடக் கிடையாது’ என கோர்ட்டுக்குச் செல்லப்போவதாக சொல்லி இருக்கிறது. இருதரப்பினரையும் பா.ஜ.கவும், காங்கிரஸும் சமாதானப்படுத்தி, மேல்முறையிட்டிற்கு செல்லவிடாமல் தடுக்க முயற்சிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன என்பது இன்றைய செய்தி. பெரும்பான்மையின் அரசியல் இதோ ஆரம்பிக்கிறது. இந்துமகாசபையை மேல்முறையீடு செல்லவிடாமல் சமாதானப்படுத்தி, “நீயும் சமாதானமாகப் போ’ என முஸ்லீம் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படும். அதற்குப் பிறகும் தங்கள் உரிமையை நிலைநாட்ட முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றால் அவர்கள் தேச ஒருமைப்பாட்டிற்கும், சகிப்புத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் என்பதாக பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படும். இந்து மனோபாவத்தில், முஸ்லீம் எதிர்ப்புணர்வும், வெறுப்பும் மேலும் வார்க்கப்படும். “என்ன இழவோ. பிரச்சினை முடிந்தால் சரி” என்று அமைதி விரும்புவர்களும் முஸ்லீம் சமூகத்தின் மீது அதிருப்தியடைவார்கள்.

தீர்ப்பில் சொல்லப்படுகிற யோசனையையே இருவரும் ஏற்றுக்கொள்ளட்டும். ராமர் கோவில் கட்டட்டும். மசூதியை கட்டட்டும். அல்லது இரண்டுமே கட்டாமல் போகட்டும். அதுவெல்லாம் பிரச்சினையல்ல. அங்கே ராமர் கோவில் இருந்தது என்றும் அது இடிக்கப்பட்டது என்றும், அதன் மீது மசூதி கட்டப்பட்டது என்றும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாய் இந்த தேசத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதுதான் பிரச்சினை. நாளை ராமர் பாலத்துக்கும் இந்த தீர்ப்பே முன்மாதிரியாகலாம். சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட வேண்டியதுதான். தொடர்ந்து இந்துமதக் கடவுள்கள் ஒவ்வொன்றாய் ஆழங்களிலிருந்துக் கிளம்பி வந்து தேசத்தை உலுக்கிக்கொண்டே இருக்கும். அதுதான் பிரச்சினை. இதை சரிசெய்ய வேண்டியது இந்த தேசத்தின் பிரஜைகள் அனைவரின் கடமை. முஸ்லீம் மக்களுடையது மட்டும் அல்ல.

“மக்களின் நன்மைக்காக இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பது தவறு. தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நீதிமன்றங்கள் மூலம் அதைச் செய்து வருகின்றனர்”. இப்படி ‘இந்திய சுயராஜ்ஜியம்’ என்னும் நூலில் சொல்லியிருப்பவர் மகாத்மா காந்தி. இன்று அவரது பிறந்த நாள். மனதில் இருத்துவோம்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

ஒடுக்கப்பட்டவன் ஏன் உரிமையைத் தேடி மதம் மாறுகிறான்? - தந்தைப் பெரியார்



ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! -
(பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)


நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது
என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும்.
இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது.
இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.
ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

சனி, 14 பிப்ரவரி, 2009

இறைவனிடம் சில கேள்விகள்


இறைவா.......

சினை முட்டையாய்,

இரத்தக் கட்டியாய்,

சதைப் பிண்டமாய்,

படிமுறைகள் பல பெற்று,

சிசுவாக மாறும் கருவறை யாவும்,

ஒன்று தானே...? இல்லை.....

மதத்திற்கு தகுந்தாற்போல்,

மாற்றி அமைத்திருக்கிறாயா..?

பின்னே ஏன்,

கருவறையில் பிறந்து..

மண்னறைக்கு போவதற்குள்.!!

மதத்தால், ஜாதியால்,

மொழியால், இனத்தால்,

பிளவுபட்டு..! கலவரத்தால்,

மாய்ந்து போகிறார்கள்..!!

ஓ.......??

மக்கள் தொகையைக் குறைக்கும்,

மாற்றுவழிதான் பிரிவுகளோ..?

கரு உலகில் நழுவி,

கலி உலகில் விழும்.!,

சிசுவிற்கு..!!

மதமுண்டா இறைவா..?

இனமுண்டா இறைவா..?

பிறகுதானே பிடிக்கிறது "மதம்"..!

நீ... படைக்கும் போது ,

பொருத்தவேண்டியதை,

பொருத்திவிட்டாய் தானே..? - இல்லை,

ஆறில் ஒன்றை அகற்றிவிட்டாயா..?,

ஆம்......

ஆடு, மாடு போல்..!,

முட்டி மோதிக்கொள்ளும்,

மனிதனைக் கண்டால்..,

அப்படித்தான் தோன்றுகிறது..!!,

மதம், ஜாதி - என்று,

மதம் பிடித்து ஆடாமல்.!

மனிதத்தை வளர்தால்...!!

குறைந்துவிடுமா உயிரிழப்புகள்..?

கூறு இறைவா கூறு..!!

உன் கூற்றைக் கேட்டுதான்,

மாற்றவேண்டும் சரித்திரத்தை...!!


ஆக்கம்:- "கவி" ஹக்