ஞாயிறு, 15 மார்ச், 2009

மலேஷியாவில் அன்னிய தொழிலாளர்கள் வெளியேற்றம்..?



கோலாலம்பூர்: வெளிநாட்டுத் தொழிலாளர்களை, குறிப்பாக இந்தியத் தொழிலாளர்களைத் திரும்பி அனுப்பும் 'திருப்பணி'யை மலேஷியாவும் தொடங்கிவிட்டது. இதன் முதல்கட்டமாக மலேஷியாவில் பணியாற்றும் இந்திய, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரி மற்றும் இன்சூரன்ஸ் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது மலேஷிய அரசு. இந்தத் தகவலை மலேஷிய மனித வளத்துறை அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுப்பிரமணியம் மேலும் கூறியதாவது:

மலேசியாவில் தோட்டத் தொழில், கட்டுமானத் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்ந்து அனுமதிகக்கப்படுவார்கள். ஆனால் இவை தவிர்த்த பிற துறைகளில் படிப்படியாகக் குறைக்கப்படும். உள்ளூர் தொழிலாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவோம். அடுத்த ஆண்டுக்குள் இப்போதுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கையை 5 லட்சமாகக் குறைத்து விடுவோம். மலேஷியாவில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி இங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும் 22 லட்சம். இது சட்டப்பூர்வ கணக்கெடுப்புதான். சட்டவிரோதமாக உள்ளவர் எண்ணிக்கை 10 லட்சம். இந்த 32 லட்சம் தொழிலாளர்களை 5 லட்சமாகக் குறைப்பதே இப்போது அரசின் முன் உள்ள சவால். அதற்காகத்தான் வரியை அதிகமாக்கியுள்ளோம். மாதம்தோறும் 30 ஆயிரம் பணியாளர்களின் வொர்க் பர்மிட்டுகள் காலாவதியாகின்றன. ஆனால் இவற்றைப் புதுப்பிப்பதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 3 லட்சம் பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி முதல் மலேசியத் தொழிலாளர்கள் 28,000 பேர் வேலைகளை இழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சம் மலேசியர்கள் தாற்காலிகமாக வேலையை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வேலை அளிக்கும் சில தொழில் அதிபர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் தினமும் 12- 24 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இதன் காரணமாகவே உள்நாட்டுத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற வேண்டியுள்ளது.ஆனால் இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுகின்றனர். இதனால்தான் முதலாளிகள் மலேஷியர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. இந்திய உணவகங்களில் உள்நாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், சமையல் உள்ளிட்ட வேலைகளுக்கு இந்தியாவிலிருந்துதான் தொழிலாளர்களை வரவழைக்கின்றனர் என்றார் சுப்பிரமணியம்.

தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு: மலேசிய அரசின் இந்த புதிய முடிவுக்கு மலேஷிய உணவகங்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மலேசிய முஸ்லிம் உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜமருல்கான் காதிர் கூறுகையில், அரசின் இந்த முடிவால், இந்திய முஸ்லிம்கள் மற்றும் சீனர்களால் நடத்தப்படும் 25,000 உணவகங்களில் பணியாற்றும் 3.75 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களும், உள்நாட்டுத் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது உள்நாட்டுத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். எங்களது உணவகங்களுக்குத் தேவையான பொருள்களை வழங்குபவர்களும் பாதிக்கப்படுவர். உணவகத் தொழில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியது. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வரியை இரண்டு மடங்கு செலுத்துவதோடு, அவர்களுக்கான மருத்துவ விசா கட்டணம், இன்சூரன்ஸ் தொகையும் செலுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

மலேஷியாவில் உள்ள இந்திய உணவகங்கள் சங்க தலைவர் ராமலிங்கம் பிள்ளையும் மலேஷிய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மலேஷிய அரசின் இந்த முடிவால் பெருமளவு பாதிக்கப்படுவோர் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்களே என்பது குறுப்பிடத்தக்கது.

தொழிலாளர் கூற்று: லெவிக் கட்டணம் 1800 ல் இருந்து 3600 ஆக மாற்றிய அறிவிப்பு எங்கள் தலையில் விழுந்த பேரிடி. இன்னும் இதில் பல மறைமுக கட்டனங்களும் சேர்த்தால் நாங்கள் செழுத்தவேண்டிய மொத்த தொகை 4000 த்தை தாண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால். அன்னிய தொழிலாளர்களின் அனைத்து கட்டனங்களையும் உணவக உரிமையாளர்களே செழுத்துவதாக அரசாங்கம் என்னிக்கொண்டுதான் இவ்வாறு கட்டணத்தை உயர்த்தினால் ஆட்குறைப்பு செய்துவிடுவார்கள் என்று உயர்த்துகிறது. நான் கேட்பது என்னவென்றால் எந்த ஒரு முதலாளியாவது அரசாங்கம் கூருகின்ற சலுகைகளை செய்கிறார்களா...?.

ஒரு உணவக தொழிலாளியின் அடிப்படை சம்பளம் 600 ரிங்கிட் முதல் 900 ரிங்கிட் வரைதான். அதில் அவன் பர்மிட்டிற்கு மட்டும் மாதம் 333 ரிங்கிட் எடுத்துவைக்க வேண்டும். மீதித் தொகையில் அவன் அடிப்படை சிலவுகள் போக அவனையே நம்பியுள்ள குடும்பத்துக்கு எவ்வளவு அனுப்புவான் என்பதை நீங்களே கணக்குப் பண்ணிக்கொள்ளுங்கள்.

இதே உள்ளூர் தொழிலாளியாக இருந்தால் ஊதியத்துடன் காப்பீட்டுத்தொகை மற்றும் சேமநிதி ஆகியவை கொடுக்க வேண்டிவரும். அவர்கள் 12,13 மணி நேரம் எல்லாம் வேலை பார்க்கமாட்டார்கள். அன்னிய தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தலாம். நாம் என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என்பதற்காகவே முதலாளிகள் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்களே தவிற தொழிலாளர் மீது உள்ள அக்கரையினால் அல்ல. "போடா" என்று சொல்லாமல் "நான் போகிறேன்" என்று சொல்ல வைக்கிறது அரசாங்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக